திராவிட இனத்தைச் சேர்ந்தவன் - முதல்வராகப் பதவியேற்றதும் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் அதிரடி மாற்றம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிற பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஸ்டாலின் உடன் அமைச்சரவையில் இடம்பெற உள்ள 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி ஸ்டாலின் பதவியேற்றது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் தமிழக முதலமைச்சர் என மாற்றப்பட்டது அதோடு திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பது சேர்க்கப்பட்டது.
இந்த செயல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுகவை தோற்றுவித்த அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக முதல் முறையாக நாடாளுமன்றம் சென்றபோது தன்னுடைய முதல் உரையில் நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று கூறி தான் தொடங்கினார்.
அண்ணாவின் அந்த உரை தற்போது வரை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அதே வழியில் அண்ணாவைப் பின்பற்றி ஸ்டாலினும் நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை பதிவு செய்துள்ளார்.