ஜெயலலிதா மீது மோடிக்கு திடீர் பாசம் - விளாசிய முதல்வர் ஸ்டாலின்
சவால் விட்ட ஜெயலலிதா அம்மையார் மீது மோடிக்கு திடீர் பாசம் வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
வளர்ச்சி பிடிக்காத கட்சியாக பாஜக
கோவை மாவட்டம் நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல முகவர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஒவ்வொரு முறையும் கழக உடன்பிறப்புகளின் தன்னம்பிக்கையை பார்த்து, என்னுடைய தன்னம்பிக்கையின் அளவு அதிகமாகிறது.

மேற்கு மண்டலத்தில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெற்றுள்ளது என்று 2026 தேர்தல் முடிவு அன்று தலைப்புச் செய்தியாக வரவேண்டும்.
என்னதான் WhatsApp, Instagram என புது புது ஊடகங்கள் வந்தாலும், வீடு தேடி சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஈடாகாது. Online, On Field இரண்டிலும் திமுகவின் செயல்பாடுகள்தான் நிறைந்திருக்க வேண்டும்.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் வாங்கியே ஆக வேண்டும். வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் தலா 40 - 50 வாக்குகளை உறுதி செய்தாலே, இந்த இலக்கை எளிதாக அடைந்துவிடலாம்.

என்றைக்கும் மக்கள் தான் நமக்கு எஜமானர்கள். நாம் அவர்களுக்கு சேவகர்கள். 75 ஆண்டுகால திமுக வலிமையாக இருப்பதற்கு, அனைத்திலும் மக்களோடு மக்களாக இணைந்து நின்று செயலாற்றுவதே காரணம். அடுத்த 2 மாதங்களுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கு திமுகதான் இருக்க வேண்டும்.
வளர்ச்சி என்றாலே பிடிக்காத ஒரு கட்சியாக பாஜக இருக்கிறது. மக்கள் அவர்களை தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். அதனால், அதிமுகவை தன்னுடைய கிளைக் கழகமாக மாற்றி, முன்னேறி வரலாம் என துடிக்கிறது பாஜக.
ஜெயலலிதா மீது மோடிக்கு பாசம்
குஜராத் மோடியா! இந்த லேடியா” என சவால் விட்ட ஜெயலலிதா அம்மையார் மீது திடீர் பாசம் இன்றைக்கு பிரதமர் மோடிக்கு வந்துள்ளது.
ஜெயலலிதா விட்ட சவாலையும், “இந்தியாவிலேயே ஊழல் மிக்க அரசாங்கம் அதிமுக அரசாங்கம் தான்” என அமித்ஷா பேசியதையும் நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை.

பிரதமர் மோடி அவர்களே, கோவை, மதுரை மெட்ரோக்களுக்கு அனுமதி வழங்க எது உங்களை தடுக்கிறது. அகமதாபாத் மெட்ரோவிற்கு அனுமதி தரும் உங்களுக்கு, தமிழ்நாட்டின் மெட்ரோ திட்டக் கோரிக்கைகள் கண்ணிற்கு தெரியவில்லையா? ஓசூர் விமான நிலையத்திற்கான அனுமதி எங்கே?, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழுமையான நிதி எங்கே?
பள்ளிக் கல்வி நிதி ரூ.3,500 கோடி எங்கே? ஜல் ஜீவன் திட்ட மானியம் ரூ.3,548 கோடி எங்கே? ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.2,246 கோடி நிதி எங்கே? ஒன்றிய அரசின் திட்டங்களுக்குக்கூட நிதியை விடுவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.