தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு ஏன் வன்மம்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் ராமநாதபுர பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், களஆய்வு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே நடைபெற்ற விழாவில், ரூ 134 கோடி மதிப்பில் 105 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 176 கோடியில் 109 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் மேலும் 50,752 பயனாளிகளுக்கு ரூ 42.68 கோடி மதிப்பிலான உதவிகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு வன்மம்
அதைத்தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், "இலங்கை கடற்படையின் அத்துமீறலை தொடர்ந்து கண்டித்து வருகிறோம். ஆனால் மத்திய பாஜக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.
கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை அமைச்சர் கூறுகிறார். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா? தமிழ்நாடு மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரமாக போய்விட்டது. தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு ஏன் வன்மம்? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?
பேரிடரின் போது தமிழகத்திற்கு வராத ஒன்றிய நிதி அமைச்சர் கரூருக்கு மட்டும் வருகிறார். கும்பமேளா, மணிப்பூருக்கு செல்லாத பாஜக குழுவினர் கரூருக்கு மட்டும் உடனே வருகின்றனர்.
தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, யாரையாவது மிரட்டலாமா என கரூருக்கு குழுவை அனுப்பியுள்ளது பாஜக.
தவறு செய்வோர், அதில் இருந்து தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின்தான் பாஜக. தன்னை உத்தமராக்கிக் கொள்ள அதில் குதித்துள்ள பழனிசாமிக்கு, ஆள் சேர்க்கும் அசைன்மெண்ட்டை பாஜக கொடுத்துள்ளது.
கூட்டணிக்கு யாராவது வருவார்களா என எடப்பாடி பழனிசாமி ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை பேசிக்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள்" என பேசியுள்ளார்.