2000 ஆண்டு கால சண்டை இது; விட்டுக்கொடுக்க முடியாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இது 2000 ஆண்டு கால சண்டை இது, ஒருபோதும் தோற்கமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
பொருநை அருங்காட்சியகம்
2 நாள் பயணமாக திருநெல்வேலி வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கர் பரப்பில் 54,296 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்தார்.

இன்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி விழாவில் நடத்த அரசு விழாவில் கலந்து கொண்ட அவர், திருநெல்வேலி மாவட்டத்துக்கான ரூ.694 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் உரையாற்றினார்.
2,000 ஆண்டுகால சண்டை
இதில் பேசிய அவர், "நான் இன்று இங்கு மகிழ்ச்சியாக மட்டுமல்ல, பெருமையாகவும் நின்று கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் நேற்று பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததுதான்.

பொருநை தமிழரின் பெருமை. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தமிழர்களான நம்முடைய பண்பாடு தனித்துவமானது, முற்போக்கானது, இந்திய துணை கண்டத்துடன் நாகரிகத்தினுடைய தொட்டிலாகவும், உச்சமாகவும் இருந்தது நம்முடைய தமிழ் மாநிலம்தான்.
அதற்கு பல இலக்கிய சான்றுகள் இருக்கிறது. அதற்கு பல இலக்கிய சான்றுகள் இருக்கிறது. ஆனால், இலக்கியம் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது என்பதால், அறிவியல் ரீதியாக தொல்லியல் சான்றுகளை சேகரித்து அதன் மூலம் நிரூபித்து வருகிறோம்.
ஆனால், தமிழர்களின் வரலாற்று தொன்மைகளை நிரூபிக்கும் ஆய்வு நடக்கக் கூடாது என மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இல்லாத சரஸ்வதி நாகரீகத்தை தேடி அலைபவர்களுக்கு, கண்முன்னே நாம் வெளியிட்டு வரும் அகழாய்வு சான்றுகள் தெரிவதில்லை.
அதற்காக நாம் சோர்ந்து விட முடியுமா? பின்வாங்க முடியுமா? நமது வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது, இது 2,000 ஆண்டுகால சண்டை. இதில் ஒருபோதும் தோற்கமாட்டோம்.
மோடிக்கு அழைப்பு
தொடர்ந்து அடுக்கடுக்கான சான்றுகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறோம். சான்றுகளை ஆய்வறிக்கையாக வெளியிட்டால் மட்டும் போதுமா? அதையெல்லாம் மக்கள் மன்றத்திலே கொண்டுவந்து வைத்து, அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக, திமுக தலைவராக மட்டுமல்ல, ஒரு தமிழனாகவும் நான் பெருமைப்படுகிறேன்.
இந்த நேரத்தில் உங்களிடம் உரிமையாக ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும், குடும்பத்துடன் சென்று இந்த அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டில் கட்டியிருக்கும் பொருநை மற்றும் கீழடி அருங்காட்சியகத்தை வந்து பார்க்க வேண்டும். இந்த கூட்டத்தின் மூலமாக, இந்த விழாவின் மூலமாக நான் அன்போடு அவர்களை அழைக்கிறேன்" என கூறினார்.