பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்துள்ள பாஜக - முதல்வர் ஸ்டாலின்
பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை அதிமுக பொதுச்செயலாளராக பாஜக தேர்வு செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஓபிஎஸ் என்றால் விசுவாசம்
கடந்த மாதம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்வு மதுரையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல, நானும் ரசிகன்தான். கழகம் எம்ஜிஆரை வளர்த்தது;. அவரும் கழகத்தை வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டார்.
அப்படிப்பட்ட தாய்க்கழகத்துக்கு, தாயின் மடிக்கு நீங்கள் அனைவரும் திரும்பியுள்ளீர்கள். தாய்க்கழகத்துக்கு திரும்பியுள்ள உடன்பிறப்புகளை திமுகவின் தலைமைத் தொண்டனாக நான் வரவேற்கிறேன்.

அதிமுக அடிமை சேவகம் செய்யப் போனதால் உரிமைக்குரல் எழுப்பி தாய்க்கழகத்துக்கு திரும்பியுள்ளீர்கள். தடம் மாறாமல் திராவிடப் பாதையில் பயணத்தை தொடரும் உங்களையெல்லாம் வருக வருக என வரவேற்கிறேன்.
சுயமரியாதையின் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளீர்கள். அண்ணாவின் தம்பியாகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்பாகவும் பிறப்பாகவும் உங்களையெல்லாம் வருக வருக என வரவேற்கிறேன்.
அமைதியும் புன்னகையும் மட்டுமல்ல ஓபிஎஸ் என்று சொன்னால் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது அவரின் விசுவாசம்தான். விசுவாசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு ஓபிஎஸ். ஆனால் துரோகத்துக்கு அடையாளமாக இருப்பவர் பழனிசாமி.
பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவர்
பழனிசாமியைப் பொறுத்தவரை தன்னை காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார். அவரின் உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுக என்ற இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி யாருக்குமே நல்லது நினைக்காது. நாளை மகளிர் தினத்தை வைத்துக்கொண்டு, இன்று சிலிண்டர் விலையை ரூ.60 உயர்த்தி மகளிருக்குப் ‘பரிசு’ கொடுத்திருக்கிறார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு ரூ.100 குறைத்தது தேர்தலுக்கான பம்மாத்து என்பதை மோடி நிரூபித்திருக்கிறார்.
என்டிஏ கூட்டணியை ‘அதிமுக கூட்டணி’ என்று சொல்ல மாட்டார்கள்; பிரதமர் மோடி கூட அதிமுக பெயரை சொல்ல மாட்டார். இந்த பேட்டர்னை கவனித்தால் தெரியும். மகாராஷ்டிராவில் சிவசேனாக்கு நடந்தது போலவும், பீகார்வில் நிதிஷ் குமார்க்கு நடப்பது போலவும், தமிழ்நாட்டில் பழனிசாமிக்கும் நடக்கப் போகிறது.
அதிமுகவில் பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச்செயலாளராக பாஜக ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. பழனிசாமி அவர்களை இந்தத் தேர்தல் வரைக்கும்தான் பாஜக வைத்திருக்கும். அதன் பிறகு அவரையே தூக்கிவிடுவார்கள். ஒருவேளை பாஜக உடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால், இப்போதே அவரை மாற்றியிருப்பார்கள்" என கூறியுள்ளார்.