அதை வெளியில் சொன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு அவமானம் - முதல்வர் ஸ்டாலின்
மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்க உள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் மேள தாளம் முழங்க திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அமெரிக்க பயணம்
அப்போது பேசிய அவர், இந்த அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. இந்த பயணம், தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்திருக்கிறது.
17 நாள் பயணத்தில் உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி உள்ளேன். அமெரிக்க பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ரூ.7,618 கோடி முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற போது, 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானம் நான் சட்டசபையில் பேசியவற்றை அவர் படித்து பார்க்க வேண்டும். என்றார்.
மேலும் மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.