ரூ.10,000 கோடி கொடுத்தாலும் அந்த பாவத்தை செய்ய மாட்டேன் - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
APPA செயலி
கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள திருப்பயர் என்ற பகுதியில் இன்று(22.02.2025) பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, APPA (Anaithu Palli Parents Teachers Association) செயலியை அறிமுகப்படுத்தினார்.
இதை தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், "அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம். பள்ளிக் கல்வித்துறையை இந்தியாவில் 2வது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறார்.
புதிய கல்வி கொள்கை
ஒருபுறம் பாராட்டிவிட்டு, இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். மத்திய அரசு தரப்பில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு செலவு செய்யவேண்டிய தொகை ஆகும்.
புதிய கல்வி கொள்கையை நாம் ஏற்க மறுப்பதால் நிதியை தர மறுக்கின்றனர். புதிய கல்வி கொள்கை சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை. இது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து.
இந்தியை திணிப்பதால் மட்டும் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று அர்த்தம் இல்லை. இந்த புதிய கல்வி கொள்கை மாணவர்களை பள்ளியில் இருந்து துரத்தும் கொள்கை, சமூக நீதிக்கு எதிரியான கொள்கை.
பாவத்தை செய்ய மாட்டேன்
ஆறாம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்னும் பெயரில் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்கின்றனர். குலத் தொழில், ஜாதித் தொழில் என்று மனுநீதி சொல்லும் அநீதியை, படித்து முன்னேற நினைப்பவர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்.
இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் ரூ. 2 ஆயிரம் கோடி கிடைக்கும். ரூ. 10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னால் கூட நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2000 கோடிக்காக இன்று நாங்கள் கையெழுத்து போட்டால் என்ன ஆகும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இதன் மூலம் 2000 ஆண்டுக்கு பின்னோக்கி நம் தமிழ் சமூதாயம் சென்று விடும். அந்த பாவத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்.
இந்தியாவில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. இந்தி பெல்ட் எனப்படும் மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்துள்ளன. சில ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.1,488 கோடி நிதி ஒதுக்கியது. 8 கோடி மக்கள் பேசும் நம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது. இதுதான் நீங்கள் தமிழை வளர்க்கும் லட்சணமா?" என பேசினார்.