விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்
தவெக தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கரூர் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழப்பு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் கரூர் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலின்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னால் பேச முடியவில்லை. இந்த சம்பவத்தில் 39 உயிர்களை இழந்துள்ளோம்.
அந்த கொடூரமான காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு மனசு கேட்கவில்லை. வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் இரவு 1 மணி அளவில் புறப்பட்டு கரூர் வந்தேன்.
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் வழங்கப்படும்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
விஜய் கைதா?
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் யார் கைது செய்யப்படுவார்கள்? என்று நீங்கள் கேட்பதற்கு எல்லாம் நான் என்னை உட்படுத்த தயாராக இல்லை" என தெரிவித்தார்.