விருதுநகரில் புதிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகரில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். சம்பிரதாயமாக இல்லாமல், விருதுநகர் மாவட்டக் கள நிலவரங்களை கேள்விக் கணை தொடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மாவட்டந் தோறும் மருத்துவமனைகள் தவிர்த்து, பள்ளிக் கல்லூரி மைதானங்களில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களைத் திறந்து வருகிறது தமிழ்நாடு அரசு.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை விருதுநகர் தனியார் பள்ளி மைதானத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.
விருதுநகரில் சிகிச்சை மையத்தில் இருந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் தங்கப் பாண்டியன், சாத்தூர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் முன் தோன்றினர்.
கடந்த காலங்களில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் சம்பிரதாயமாகவே நடைபெறும். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்து பதிலறிந்தார்.
தடுப்பூசி போடும் நிகழ்ச்சி குறித்துக் கேட்ட போது, முன்பதிவு செய்து தடுப்பூசி போடுவதால், எந்த ஒரு வேஸ்டேஜ் இல்லாமல் தடுப்பூசிக் குப்பிகள் பயன்படுத்தப் படுவதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் குறிப்பிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய்த் தாக்கம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, ஒன்றிரண்டு பேர்க்கு கருப்புப் பூஞ்சை நோய்க்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் இனி விருதுநகர் மாவட்ட மருத்துவமனையிலேயே கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மருந்துகள் வரவழைக்கப் பட்டுள்ளதாக ஆட்சியர் கண்ணன் தெரிவித்தார்.
ஊரடங்கில் அத்தியவாசியப் பொருட்களான காய்கறி மற்றும் மளிகை தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் ஆட்சியர் தெரிவித்தார்.
விழா இறுதியில், சுகாதாரத் துறை சார்பாக புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனங்களை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.