''எம்.ஜி.ஆர் என்னை நன்றாக படிக்கச் சொன்னார்''- மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரச்சாரங்களை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ’அதிமுகவை நிராகரிப்போம், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என திமுக தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அருகே நசரத்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''ஆரணியில் இழப்பீடு கோரிய பெண்ணுக்கு உதவித்தொகை கிடைக்க திமுக நடவடிக்கை எடுத்தது.
ஆனால் அதிமுக ஐடி, திமுகவை குற்றம்சாட்டி தவறான தகவலை அளித்துள்ளது. பெண்ணுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை குறித்து நான் நிரூபிக்கத் தயார். நிரூபிக்காமல் போனால் மன்னிப்பு கேட்கிறேன்.
அதேபோல் அதிமுக ஐடி பிரிவு இதை நிரூபிக்கத் தவறினால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். எம்.ஜி.ஆர் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார். ஒரு பெரியப்பாவாக எம்.ஜி.ஆர் என்னை நன்றாக படிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அறிவுறுத்தினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரை என்றாவது பக்கத்தில் சென்று பார்த்திருக்கிறாரா. ரயில் இன்ஜின் திருடியவனை விட்டுவிட்டு கரியை திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இது'' என்றார்.