பாஜக ஆட்சி இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

M K Stalin Government of Tamil Nadu DMK BJP
By Thahir Apr 13, 2023 02:45 AM GMT
Report

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

அந்த கடிதத்தில், இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை என்றும் அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

stalin-letter-to-cms-non-bjp-ruled-states

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருப்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுநர்களுக்கு செக்?

மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா’ உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி, அது தொடர்பாக ஏப்ரல் 10-ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் தனது கடித்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என தாம் நம்புவதாகவும், அவர்களது மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.