கலைஞர் நினைவு நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.
கலைஞர் நினைவு நாள்
தமிழக அரசியல் வரலாற்றில் தகைமைசால் தலைவர், எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், திரைக்கதை வசனகர்த்தா,இலக்கியவாதி, திரைப்படத் தயாரிப்பாளர், தலைசிறந்த நிர்வாகி, தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சர் என பன்முகத் தன்மையோடு விளங்கிய ஒப்பற்ற கலைஞர் முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதி.
கலைஞர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து தமிழக வரலாற்றில் தமக்கென்று ஒரு நீங்காத இடத்தை ஒதுக்கிக்கொண்டவர். இந்த நிலையில், இன்றைய தினம் முத்தமிழறிஞர் கலைஞரின் 6வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
அமைதி பேரணி
அதனையோட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. காலை 7.00 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து இந்த அமைதிப் பேரணி தொடங்கியிருக்கிறது.
இதை தொடர்ந்து, வாலாஜா சலை வழியாக , காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை சென்று இந்த பேரணியானது நிறைவு பெறுகிறது. பிறகு, மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.
இந்த அமைதி பேரணியில் திமுக இணை பொதுச்செயலாளர் எம்.பி கணிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சேகர் பாபு, ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி உள்ளிட்ட பல அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.