SIR-ஐ எதிர்ப்பது ஏன்? அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
SIRக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கான(SIR) அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
SIR-க்கு எதிராக இன்று சென்னை திநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொள்ள 43 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாமக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட 8 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "“மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது.
அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.

நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.
அதைவிடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே" என பேசினார்.
75 லட்சம் வடமாநிலத்தவர்கள்
இதில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன், "தகுதியான ஒருவரின் பெயர் கூட வாக்காளர பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது அவசியம் தான். ஆனால் அதில் அவசரம் ஏன்? 2026 தேர்தலுக்கு பிறகே SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என கூறினார்.

"S.I.R மூலம் தமிழகத்தின் உரிமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 75 லட்சம் வடமாநிலத்தவர்கள் வாக்களிக்கும் நிலை ஏற்படலாம். ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளோம். சில கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தது வருத்தமாக உள்ளது" என மதிமுக நிறுவனர் வைகோ தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் செல்வோம்
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்புக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள நவம்பர் 04 - டிசம்பர் 04 வரையிலான காலம் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலம். இதனால் பெரும்பாலானோர் விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க முடியாத நிலை ஏற்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் திருநாள் வருவதால் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ வாக்குரிமையை இழக்கும் சூழல் வரும்.
பீகாரில் நடந்த குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடத்துவது ஜனநாயகத்தையே அடியோடு குழி தோண்டி புதைப்பதாக இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் S.I.R-ஐ நடத்த வேண்டும்.
இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.