எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து ஆட்சி நழுவி திமுகவிடம் வரப்போகிறது - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
அதிமுகவிடம் இருந்து ஆட்சி நழுவி திமுகவிடம் வரப்போகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது 3-ம் கட்ட பிரசார பயணத்தை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணைகுப்பம் ஊராட்சியில் இருந்து தொடங்கினார்.
இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட மக்களின் குறைகளைக் கேட்கும் உங்கள்தொகுதியில் ஸ்டாலின் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, புகார் பெட்டியின் மூலம் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- தகுதி இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் கையை விட்டு ஆட்சி நழுவ போகிறது. திமுக கையில் தான் ஆட்சி வரப்போகிறது.
என்.எல்.சி.யில் தமிழர்களுக்கு வேலை வழங்காமல் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்.எல்.சி. குறைகள் தீர்க்கப்படும்.கருணாநிதி இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு நம்முடன் இருக்கும் என்றார்.