ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் கூட ஆக முடியாது - அமைச்சர் உதயகுமார்

admk tamilnadu udaykumar
By Jon Jan 20, 2021 04:26 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக, திமுகவும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர், “முதல்வர் கொரோனா தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல் கடந்த 8 மாதமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து வருகிறார். ஆனால், அறைக்குள் முடங்கிக் கிடந்த ஸ்டாலின், இன்றைக்கு கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்பதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. கடந்த திமுக ஆட்சியின்போது நடந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு இப்படிப்பட்ட சம்பவங்களை இன்னும் மக்கள் மறக்கவில்லை. அதுமட்டுமல்லாது இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறி அப்பாவி மக்களின் நிலத்தை அபகரித்ததையும் யாரும் இன்னும் மறக்கவில்லை.

மன்னிக்கவும் இல்லை. ஆகவே ஸ்டாலின் எத்தனை முறை பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வரமுடியாது. அதிமுக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.