நீங்க முதல்வர் ஆன உடன்: ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த 9 வயது சிறுமி

election meeting admk
By Jon Feb 13, 2021 06:13 PM GMT
Report

நீங்கள் முதல்வர் ஆனால் எங்கள் பகுதிக்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தனது கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு தங்களது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்திற்கு சென்றார். அப்போது ஒரு சிறுமி ஸ்டாலினிடம் பேச வேண்டும் என்றார், சரி பேசு என்றார் அதற்கு அவர் நான் மைக்கில் பேச வேண்டும் என்றார்.

இப்போது அந்த சிறுமி சஞ்சனாவை பேச அழைக்கிறேன் என தெரிவித்த ஸ்டாலின் அந்த சிறுமியிடம் மைக்கை கொடுக்கச் சொன்னார். அப்போது அந்த சிறுமி பேசுகையில் இத்தனை கூட்டத்திற்கு மத்தியில் என்னை பேச வைத்ததற்கு நன்றி ஐயா என கூறி தனது பேச்சை தொடர்ந்தார். அவர் கூறுகையில், நீங்கள் முதல்வரானவுடன் எங்கள் விருத்தாசலத்தை மாவட்டமாக ஆக்கி கொடுக்க வேண்டும்.

விருத்தாசலத்தை விட சின்ன சின்ன ஊர் எல்லாம் மாவட்டமாக ஆகிவிட்டது. எல்லா வசதிகளும் உள்ள நிலையிலும் எங்கள் ஊர் மாவட்டமாக ஆகவில்லை. நீங்கள் அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். இன்னொரு கோரிக்கையும் இருக்கிறது. எங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கொடுங்கள்.விருத்தாசலத்தை சுற்றியுள்ள மக்களுக்கு ஒரே மருத்துவமனை இதுதான்.

இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதே இல்லை. விபத்து ஏற்பட்டாலோ, பிரசவ வலி ஏற்பட்டாலோ அந்த மருத்துவமனையில் வசதிகள் இல்லை என கூறி வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். அந்த மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் இறக்க நேரிடுகிறது. இதனால் இந்த மருத்துவமனையை நீங்கள் தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அந்த சிறுமி.