‘’ ரொம்ப வருத்தமா இருக்கு அமைச்சரே ’’ - கவலையில் முதலமைச்சர் ஸ்டாலின்
ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கடந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதி 6 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ,முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இரண்டு முறை கடிதங்கள் எழுதினார். ஆனால் இலங்கை கடற்படையோ எதையும் கண்டுகொள்ளாமல் மேலும் 12 மீனவர்களை கைது செய்தனர்.
அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனாலும் இலங்கை அரசு பணிந்ததாக தெரியவில்லை. 10 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 43 தமிழக மீனவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, 43 மீனவர்களையும் ஜனவரி 13ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இச்சூழலில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மீனவர்களை விடுவிக்காமல் அவர்களை விசாரிக்க, ஜனவரி 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இந்த உத்தரவு மீனவர்களின் குடும்பத்தினரை மிகுந்த கவலை அடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள ஸ்டாலின்:
Deeply disappointed to note that the remand of our fishermen has been extended. Urge Hon'ble @DrSJaishankar to prevail upon Sri Lanka to secure their immediate release. https://t.co/0Q1UqzimwI
— M.K.Stalin (@mkstalin) January 13, 2022
"இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டு, அமைச்சர் ஜெய்சங்கரை டேக் செய்துள்ளார்.