நெல் ஊக்கத்தொகை கடிதத்தைப் பொதுவில் வெளியிட தயாரா? - ஸ்டாலின் கேள்வி
தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?" என என நெல் ஊக்கத்தொகை தொடர்பில் நிதியமைச்சர் வெளியிட்ட பதிவு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதியமைச்சர் பதிவு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும். மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும்.
இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது.
அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை. மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின் கேள்வி
இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்தப் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கும் விதமாக எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது.
எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.