'ஸ்டாலின் சவால் எல்லாம் ஒரு சவடால் தான்' - அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி
சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக தான் ஜெயிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”வெடிகுண்டு மிரட்டலுக்கு அஞ்சுபவர் முதல்வர் இல்லை. இதையெல்லாம் காவல்துறை பார்த்துக் கொள்ளும். கனிமொழியின் பார்வை எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. அதிமுக அரசு ஏதும் செய்யவில்லை எனக் கூறும் கனிமொழி வைகை ஆற்றுப் பாலத்தை ஹெலிகாப்டரிலா கடந்து சென்றார்? தரை வழியாக செல்லும் போது திட்டம் அனைத்தும் பார்த்திருக்க முடியுமே என்று காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்டது முதல்வர் மட்டும் எடுத்த முடிவு. இதன் மூலமாக விவசாயிகள் பயனடைவார்கள். கடன் தள்ளுபடி செய்யப்பட்டதெற்கெல்லாம் சிபிஐ விசாரணை கோருவது சரியானது அல்ல. ஒரு துறையை கூட ஸ்டாலினால் நம்ப முடியவில்லை.
ஸ்டாலினின் சவால் எல்லாம் வெறும் சவடால் தான். 234 தொகுதிகளிலும் அதிமுக தான் வெல்லும். மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.