ஸ்டாலின் பிரச்சாரம்.. எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு.!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்து வருகிற நிலையில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தமிழகம் முழுவதும் தொடர் பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணனின் மகன் பிரகாஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகரனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் கணக்கில் வராத 80 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எ.வ. வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டிருக்கும் சூழலில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா என்ற புகாரின் அடிப்படையில் எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்தே ஐடி ரெய்டு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.