முதல்வர் விஜய் டெல்லி சென்றது கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Vijay M K Stalin BJP Delhi
By Karthikraja Jun 13, 2026 02:43 PM GMT
Report

முதல்வர் விஜய் டெல்லி சென்றது கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா என மு.க.ஸ்டாலின் கேள்விஎழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

முதல்வர் விஜய் டெல்லி சென்றது கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? மு.க.ஸ்டாலின் கேள்வி | Stalin Asks Vijay Went Delhi For Escape Karur Case

இதில் கலந்து கொன்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், "நான் பேசிய பேச்சினை திரித்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக கூறி நம் எதிரிகள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

நான் ஏற்கனவே பலமுறை சொன்னது போல இப்போதும் சொல்கிறேன் திமுக பொறுப்பான, விழிப்பான, எதிர்கட்சியாக தன்னுடைய கடமையை உறுதியுடன் செய்யும். இந்த ஆட்சியின் அவலங்களை தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம், கேள்வி கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றி விடுவார்கள்.

பொதுவாக எல்லோரும் ஷாப்பிங் போனால் என்ன வாங்குவார்கள் டிரெஸ் வாங்குவார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? அதிமுக எம்எல்ஏ-க்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார்.

நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா?

முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜிநாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார்.

முதல்வர் விஜய் டெல்லி சென்றது கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? மு.க.ஸ்டாலின் கேள்வி | Stalin Asks Vijay Went Delhi For Escape Karur Case

இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? பாஜக. மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, பாஜகவின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார்.

உதவி என்று கேட்டபோது அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் எல்லாம், இதைப் பற்றிப் கேட்கும்போது, தர்மசங்கடத்தில் தவிக்கிறார்கள்.

வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைத்த மை அழிவதற்குள், ரிசைன் செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நியாயமாக இதைக் கேள்வி கேட்க வேண்டுமா, வேண்டாமா?

ஒரே மாதத்தில் எம்எல்ஏக்கள் ரிசைன் செய்துவிட்டு தவெக.வில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் தவெகவில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா, வேண்டாமா? 

டெல்லி சென்றது கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா?

முதலமைச்சர்தான் மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க" என்று சொல்கிறாரே தவிர அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா? அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள்.

டெல்லியில் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இதே நான் டெல்லி சென்றபோது என்னை அமலாக்கதுறை விசாரணை தப்பிக்கவும், பா.ஜ.க உடன் மறைமுக கூட்டணி என்றும் அப்போது விஜய் என்னை விமர்சித்து பேசினார்.

ஆனால் இப்போது விஜய் என்ன செய்திருக்கிறார்? கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கவே நீங்கள் டெல்லி சென்றீர்களா? பாஜகவை உறுதியாக விமர்சித்து பேசினால், உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பேசவே பயப்படுகிறீர்களா? உங்களைப் போன்று நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.

திமுக அரசின் "பாலிசி நோட்" போன்றுதான் முதல்வரின் மொத்த உரையும் இருந்தது. ஈ அடிச்சான் காப்பியாக இருந்தால் நன்றாக இருக்காது என 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று நான் சொன்னதை 2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் என மாற்றி பேசி வந்துள்ளார். இருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என பேசியுள்ளார்.