தைரியமிருந்தால் தமிழ்நாட்டை தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? முதல்வர் ஸ்டாலின் சவால்
தைரியமிருந்தால் தமிழ்நாட்டை தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா என முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
ஸ்டாலின் திருவள்ளூர் பிரச்சாரம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதில் பேசிய அவர், "தமிழ்நாட்டின் வடக்கு வாசலாக இருக்கிற திருவள்ளூருக்கு, அடுத்தக்கட்ட வளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் கிராம தெய்வங்கள் வடக்கு நோக்கியே இருக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும், அப்படி வரக்கூடிய NDA எனும் ஆபத்தை தடுத்து நிறுத்தக் கூடிய தேர்தல்தான் இது.
ஆப்பத்தை குரங்கு பங்கிட்ட கதைப்போல, அதிமுகவை பங்கிட்டு தருகிறேன் என்று பாஜக முன்வந்து, பாஜகவின் கிளைக் கழகச் செயலாளராக பழனிசாமியை நியமித்திருக்கிறது.
கிராமத்தில் இருக்க இடம் கொடுத்தால் மடத்தைக் கேட்பார்கள் என்று சொல்வார்கள். அதுபோல, பழனிசாமி எனும் அடிமை இருக்கும் தைரியத்தில் அதிமுகவை வைத்து NDA ஆட்சி நடத்த பாஜக திட்டமிடுகிறது.
அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். அடிமைகளை விரட்ட வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக்கொள்கையை கொண்டு வருவோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜக அமைச்சர்களின் அந்த பேச்சுகளுக்கு எதிராக இதுவரைக்கும் பழனிசாமி வாயில் இருந்து ஒரு வார்த்தை வந்திருக்குமா?
11 தோல்வி பழனிசாமி
திராவிட மாடலின் திட்டங்களையும், அதன் மூலம் பயன்பெறும் மகளிரையும் கொச்சைப்படுத்தி பேசியதற்காக, பழனிசாமி பெற்ற பரிசுதான் ‘பத்துத்தோல்வி பழனிசாமி’ என்றார்கள். அந்தப் பெயரை ‘11 தோல்வி பழனிசாமி’ என மாற்றம் செய்யும் நேரம் வந்துவிட்டது.

இந்த ஸ்டாலின் இருப்பதுவரை, திமுக இருக்கும்வரை தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது! நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். அடிமைசாமி போல, வாய் மூடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை.
டெல்லி Remote Control-க்கு இங்கு Signal கிடைக்காது. DMK is Unstoppable என்று நிரூபிக்கும் திராவிட மாடல் 2.O ஆட்சியை அமைப்போம்.
தமிழ்நாடு, தமிழ்நாடாக இருப்பதே பலருக்கு உறுத்தலாக இருக்கிறது. பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு, நம் தாய் நாட்டிற்கு ‘தமிழ்நாடு' என பெயர் சூட்டியிருக்கிறோம். அதனை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?
தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்பது ஆர்.என்.ரவியின் குரல் அல்ல; அது ஆர்எஸ்எஸ் குரல்" என பேசியுள்ளார்.