களத்தில் உள்ள உண்மையை அப்படியே தெரியப்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ள நிர்வாகிகள் எந்த சமரசமும் இல்லாமல் களத்தில் உள்ள உண்மையை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் போது பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தோல்வி அடைந்த தொகுதிகளில் உண்மையான காரணங்கள் அனைத்தையும் அறிக்கையாக ஜூன் 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தேர்தல் முடிவுகள் குறித்து இதுவரை இரண்டரை லட்சம் நிர்வாகிகள், தொண்டர்கள் இணையதளம் மூலம் தலைமைக்கு புகார் மனு கொடுத்துள்ளதாகவும், திமுகவில் விரைவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்து ஸ்டதலின் தனது எக்ஸ் பக்கத்தில், யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம், யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது என கள ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவினருக்கு அறிவுறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கள ஆய்வுக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் கட்சியில் சீர்திருத்தங்களைச் செய்ய உள்ளதாகவும், தொண்டர்களின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.