மோடியின் காரை மறித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் - ஏன் தெரியுமா?
பஞ்சாபில் மோடியின் காரை மறித்து போராட்டம் நடத்தியது ஏன் என விவசாயச் சங்கத் தலைவர் சுர்ஜித் சிங் பூல் விளக்கமளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரில் நேற்றைய தினம் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சாலை மார்க்கமாகச் சென்ற பிரதமர் மோடியை பதிண்டாவில் உள்ள மேம்பாலத்தில் வைத்து விவசாயிகள் சிலர் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் காரணமாக மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தது. அந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டதால் பிரதமரின் பஞ்சாப் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் விமானம் நிலையம் சென்றார்.
இந்த பாதுகாப்பு குளறுபடிக்குப் பஞ்சாப் காவல்துறையும், மாநில அரசும் தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியதுடன் மாநில உள்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியன் (கிராந்திகாரி) தலைவர் சுர்ஜித் சிங் பூல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாகப் பேரணிக்குச் செல்கிறார் என்று (ஃபெரோஸ்பூர்) காவல் கண்காணிப்பாளர் எங்களிடம் கூறினார். பிரதமர் வருவதால் இங்கிருந்து களைந்து செல்லுங்கள் என்றார். ஆனால், நாங்கள் அவர் கூறியது பொய் என்றே நினைத்தோம். அதனால்தான் தொடர்ந்து அந்த இடத்திலிருந்தோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் மாநில அரசிடம் விளக்கம் கேட்ட நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமரின் பாதை மாற்றம் குறித்து எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மோசமான வானிலை மற்றும் எதிர்ப்புகள் காரணமாகப் பயணத்தை நிறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், பிரதமரின் திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.