நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார்
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என நடிகை சிருஷ்டி டாங்கே அறிவித்துள்ளார்.
பிரபுதேவா நடன நிகழ்வு
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்வு சென்னை ஒய்.எம்.சி.எ மைதானத்தில் நாளை(22.02.2025) மாலை நடைபெற உள்ளது. இது பிரபுதேவாவின் முதல் லைவ் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்வில் சிருஷ்டி டாங்கே, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன் என நடிகை சிருஷ்டி டாங்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிருஷ்டி டாங்கே
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் என்னை பார்க்க காத்திருக்கும் எனது ஆதரவாளர்கள், ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். நான் அந்த ஷோவில் இருந்து விலகுகிறேன். இதை சொல்வதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவாவுக்கு எதிரானது அல்ல.
நான் எப்போதுமே அவருடைய ரசிகை. அதே வேளையில் அந்த நிகழ்ச்சியில் காட்டப்படும் பாரபட்சங்களை என்னால் ஏற்க முடியாது. இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வந்த போதிலும் பாரபட்சம் காட்டுவதை நினைக்கும் போது என் மனதை உண்மையில் காயப்படுத்திவிட்டது.
மேலும் உங்களுக்கான உரிமையை பெற இன்னும் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளும் எனக்கு அதிருப்தியை அளிக்கின்றன. இவைதான் நான் ஷோவில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
உரிய மரியாதை
பிரபுதேவா சாரை கொண்டாட எனக்கு ஒரு நிகழ்வு தேவையில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் அவரைக் கொண்டாடுவோம். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒரு கொண்டாட்ட நினைவாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது.
இது நான் கேட்கும் மன்னிப்பு இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்தான விளக்கம். அடுத்த முறை சிறந்த ஒரு நிகழ்ச்சியில், எனக்குரிய மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தும் குழு, திட்டமிடலில் அதிக கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கலாம் என்பதுதான் என்னுடைய ஒரே விருப்பமாகும். இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நிறைய கற்றுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.