எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும் சொல் தமிழா சொல் - ரூ.40 லட்சம் பரிசு

Tamil nadu Chennai Tamil
By Karthikraja Jan 25, 2025 03:39 PM GMT
Report

சொல் தமிழா சொல்

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு 40 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் மிகப் பிரம்மாண்டமாக பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. 

sol tamizha sol சொல் தமிழா சொல் 2025

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தர் அவர்களால் தமிழ் வளர்ச்சிக்காக நிறுவப்பட்டுள்ள தமிழ்ப்பேராயம் அமைப்புதான் இந்தப் பேச்சுப் போட்டியை நடத்துகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை ஒன்பது மண்டலங்களாகப் பிரித்து ஒரு கோடி ரூபாய் செலவில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

இளம் தலைமுறையினரிடம் தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக “சொல் தமிழா சொல்” என்ற மாநில அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது! தமிழகமெங்கும் தமிழில் பேச்சுத் திறன்மிக்க கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்கத்துடன் எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் இப்போட்டியை நடத்துகிறது.

40 லட்சம் பரிசு

தொகை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இம்மாதம் 26ஆம் தேதி சென்னையில் தொடங்கி, மார்ச் 23 சேலம் வரை சுமார் இரண்டு மாத காலத்துக்கு போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் முதலிடம் பிடிக்கும் ஒன்பது பேருக்கு தலா ரூ.1,00,000/- பணப்பரிசும், இரண்டாமிடம் பிடிக்கும் 9 பேருக்கு தலா ரூ. 75,000/- பரிசும், மூன்றாமிடம் பிடிக்கும் 9 பேருக்கு தலா ரூ. 50,000/- பரிசும் வழங்குகிறது. இவை தவிர ஒவ்வொரு மண்டலத்துக்கும் 5 பேருக்கு என மொத்தம் 45 பேருக்கு தலா ரூ.20,000/- ஆறுதல் பரிசாக வழங்குகிறது.

இறுதியாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ. 5,00,000/- பரிசும், இரண்டாமிடம் வருபவருக்கு ரூ. 3,00,000/- பரிசும்,, மூன்றாமிடம் பெறுபவருக்கு ரூ. 2,00,000/- பரிசும் வழங்கப்படவுள்ளது. பரிசுத் தொகை மட்டுமின்றி போட்டியை நடத்துவதற்கான செலவுளைச் சேர்த்து சுமார் ரூ. 1,00,00,000/- தொகையை (இந்த ஒரு போட்டிக்காக மட்டுமே) தமிழ்ப் பேராயத்தின் புலவலர் மாண்பமை பாரிவேந்தர் அவர்கள் ஏற்று செய்கிறார்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகம் முழுவதிலும் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் மாணவர் முதல், முனைவர் பட்ட ஆய்வாளர் வரை கல்லூரி-பல்கலைக்கழகத்தில் பயில்வோரில் 18 முதல் 25 வயது வரை உள்ள பேச்சுத் திறன் கொண்ட மாணவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம். போட்டிகள் பற்றிய விரிவான விவரங்களை அறிந்துகொள்ள க்யூ.ஆர். கோடைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 

srm sol tamizha sol சொல் தமிழா சொல் 2025

போட்டியில் கலந்து கொள்ள  விரும்புவோர் https://forms.gle/44ud2xALLGqLgNoC7 இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044 27417375, 2741 7376, 2741 7377, 2471 7378 ஆகிய எண்களில் அல்லது tamilperayam@srmist.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்த் தொண்டில் டாக்டர். பாரிவேந்தர்

அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் SRM பல்கலைக்கழத்தின் நிறுவனரான மாண்பமை பாரிவேந்தர் அவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமின்றி வட மாநிலங்களில்கூட SRM பல்கலைக்கழத்தின் கிளைகளைப் பரப்பி, கல்விப் பணி செய்து வருவது எல்லோரும் அறிந்ததே. இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களில் இருந்தும் மட்டுமின்றி, உலகின் 56 நாடுகளில் இருந்தும் மாணவர்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வந்து படிக்கிறார்கள்.

அவ்வளவு பெருமைக்குரிய கல்வி நிறுவனத்தின் வேந்தர் அவர்கள், சிறு வயதிலிருந்தே தமிழ் மீது கொண்டிருந்த காதல் பெரும்பாலானோர் அறியாதது. கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் எழுதியவர், கவியரங்கங்களில் பங்கேற்றவர். அதன் விளைவாக இரண்டு கவிதை நூல்களை படைத்திருக்கிறார். அவர் தெய்வமாக மதிக்கும் தாயைப் பற்றி 'தாயாகி வந்த தெய்வம்' என்று ஒரு நூலும், 'பாரிவேந்தர் கவிதைகள்' என்ற தலைப்பில் மற்றொரு நூலும் வெளியிடப் பட்டிருக்கிறது. 

srm paariventhar

இயல்பாகவே தமிழ்ப் பற்றுள்ளவர் வேந்தர், 'தமிழ்ப் பணியாற்றுகிறோம்' என்று யார் வந்து எவ்வளவு கேட்டாலும் நிதியுதவி செய்துகொண்டிருந்தவர். 'மற்றவர்கள் செய்யும் தமிழப்பணிக்கு நாம் உதவுகிறோம், நாமே நேரடியாக தமிழ்ப் பணி செய்தால் என்ன?' என்ற எண்ணத்தில் 'தமிழ்ப்பேராயம்' என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழ்ப்பேராயத்தின் புரவலராக இருந்து கோடி கோடியாக பணத்தை அள்ளித் தந்து தமிழை வளர்க்கப் பாடுபட்டு வருகிறார் வேந்தர்.

தமிழ்ப்பேராயம்

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக எவ்வாறு சாகித்திய அகாதெமி அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ, அதுபோல தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்ப்பேராயம் எனப்படும் தமிழ் அகாதெமி என்ற அமைப்பு.

பல மொழிகளின் வளர்ச்சிக்காக சாகித்திய அகாதெமி செயல்படுவதைப் போல தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாம் செயல்பட வேண்டும் என்ற மாண்பமை வேந்தரின் விருப்பத்துக்கிணங்க, இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. முனைவர். கரு நாகராசன் அவர்களின் தலைமையில், தமிழ்ப்பேராயம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பு பல்வேறு பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது. மிகச் சிறந்த நூல்களெல்லாம் தமிழறிஞர்களைக் கொண்டு எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான செவ்விலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வேறு எங்கும் கிடைக்காத அரிதான நூல்களை எல்லாம் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். சான்றிதழ் வகுப்புகள், பட்டய வகுப்புகளையும் நடத்துகிறார்கள். 

srm tamil academy எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம்

தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள தெய்வத்தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்போடு சேர்ந்து, ஆலயங்களில் தமிழ் மூலமாக எவ்றாறு வழிபாடு செய்வது என்பதற்காக அருட்சுனைஞர் என்ற பட்டய வகுப்பை 12 ஆண்டு காலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பயிற்சி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அருட்சுனைஞர்கள் (அர்ச்சகர்கள்) தமிழகமெங்கும் உள்ள பல கோயில்களில் பணி செய்கிறார்கள்.

சமய தொண்டு

இதுபோன்று வள்ளலார், திருமூலர் உள்ளிட்டோரைப் பற்றிய பட்டய வகுப்புகள் எல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். இதுபோன்று பல்வேறு தமிழ்ப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவ்வப்போது தேசிய சர்வதேச கருத்தரங்குகள் நடத்தப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று அவற்றை நூலாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக வரலாறே போற்றும் அளவுக்கு தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சைவ ஆதீனங்களை எல்லாம் பல்கலைக்கழகத்துக்கு வரவழைத்து, அவர்கள் கடந்த காலத்தில் ஆற்றிய, தற்போது ஆற்றிக்காண்டிருக்கும் தமிழ்ப் பணிகளையெல்லாம் எல்லோரும் அறியச் செய்யும் விதமாக அந்த மாநாட்டை நடத்தினார்கள்.

அடுத்த ஆண்டில் வைணவ சமயத்தின் சார்பில் தமிழ்ப் பணி எவ்வாறு ஆற்றப்படுகிறது என்பதற்குச் சான்றாக ஜீயர் பெருமக்கள், ஆச்சாரியப் பெருமக்கள் எல்லோரையும் அழைத்து ஒரு மாநாடு நடத்தினார்கள். இதுபோன்று பல்வேறு தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.

தமிழ்ப்பேராய விருதுகள்

தமிழ்ப்பேராயத்தின் பணிகளிலேயே மிகவும் சிறப்பானது ஆண்டுதோறும் தமிழ்ப்பேராயம் வழங்கும் விருது நிகழ்வுதான். 12 தலைப்புகளில் சிறந்த கவிஞர்கள், சிறந்த படைப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தலைப்புகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 

எட்டு தலைப்புகளில் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. எட்டு நூலாசிரியர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், எட்டு பதிப்பகங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகின்றன. சிறந்த தமிழ்ப்பணியாற்றும் இதழ்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. கிராமப்புறத்தில் நாட்டுப்புறக் கலைகளை வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்ப்பேராய விருது பெற்ற பலர் சாகித்திய அகாதெமி விருதுகளையும் செம்மொழித்தமிழாய்வு நிறுவன விருதுகளையும் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளையும் பெற்றுள்ளனர். எடுத்துக்காட்டாக 2014ஆம் ஆண்டு நாவலுக்காகத் தமிழ்ப்பேராய விருது பெற்ற திரு.பூமணிக்கு (அஞ்ஞாடி நாவல்) அதன் பின்னர் அதே நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கியுள்ளது. அதேபோல் 2015ஆம் ஆண்டு சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ்ப்பேராய விருது பெற்ற திரு. வண்ணதாசன் அவர்களுக்கு (ஒரு சிறு இசை) சாகித்திய அகாதெமி அதே நூலுக்கு 2016ஆம் ஆண்டு விருது வழங்கியுள்ளது.

பாரிவேந்தர் பைந்தமிழ் விருது

2012ஆம் ஆண்டு இளம் ஆய்வறிஞராகத் தமிழ்ப்பேராய விருது பெற்ற முனைவர் க. சுந்தரபாண்டியன், முனைவர் பா. ஜெய்கணேஷ் ஆகியோர் அதன் பிறகு குடியரசுத் தலைவர் விருது பெற்றனர். இவ்வாறு தமிழ்ப்பேராய விருதாளர்கள் யாருடைய தலையீடும் இல்லாமல், வெளிப்படையாக தேர்வு செய்யப் படுகிறார்கள் என்பதற்கு, அதே விருதாளர்கள் பெற்றுள்ள மற்ற விருதுகளே சான்று.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஆகச்சிறந்த தமிழ் ஆளுமையை அடையாளம் கண்டு ‘பாரிவேந்தர் பைந்தமிழ் விருது’ என்ற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்குகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளி்ல் இதுவரை 101 ஆளுமைகள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். மூன்று கோடி ரூபாய்க்கும் மேலாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 9 வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். நான்கு வெளி நாட்டைச் சேர்நத் தமிழ்ச் சங்கங்கள் விருதைப் பெற்றிருக்கின்றன. வட மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் இதழ்கள், தமிழ்ச் சங்கங்களும் கூட விருதுகளைப் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், உலகின் எல்லா நாடுகளிலும் எங்கெல்லாம் தமிழ்ப் பணி செய்யப்படுகிறதோ அவையெல்லாம் அடையாளம் கண்டு இதழ்களுக்கும், அமைப்புகளுக்கும், அறிஞர்களுக்கும் தொடர்ந்து விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம் வேந்தருக்கு உள்ள தமிழ்ப்பற்று.