எஸ்.ஆர்.எம் தமிழ்பேராயம் நடத்தும் சொல் தமிழா சொல் பரிசளிப்பு விழா - சிறப்பு விருந்தினர்களாக சீமான், அண்ணாமலை
எஸ்.ஆர்.எம் தமிழ்பேராயம் நடத்தும் சொல் தமிழா சொல் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா சென்னையில் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
சொல் தமிழா சொல் இறுதிச்சுற்று
எஸ்.ஆர்.எம் தமிழ்பேராயம் சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பேச்சுத் திறனை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், 9 மண்டலங்களில் மாபெரும் பேச்சுப்போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.
மாநில அளவிலான இறுதிப்போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் 06.04.25 ஞாயிற்றுக் கிழமையிலும், இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா 07.04.25 திங்கட்கிழமை காலையிலும் நடைபெற உள்ளது.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும். தமிழ்ப்பேராயத்தின் புரவலருமான டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெறும் அவ்விழாவில் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அரசியல் ஆளுமைகள் சிறப்புரை ஆற்றுவார்கள்.
ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், SRMIST வளாக நிர்வாகி இரா.அருணாச்சலம் வரவேற்புரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் அறிமுக உரையாற்றுகிறார். பேராசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துரை வழங்குவார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
மாநில அளவில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-ம் பரிசாக ரூ.3 லட்சம், 3-ம் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.40 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.