ஸ்ரீவில்லிபுத்தூர் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து - சிறுவன் படுகாயம்

Tamil Nadu Virudhunagar Srivilliputhur
By mohanelango Apr 27, 2021 05:43 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி என்ற கிராமத்தில் ஸ்ரீ பாபநாஸ் மேட்ச்வோர்க் என்ற தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு மாலை நேரத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சைதூர் அலி என்ற சிறுவன் தனது தந்தை அப்துல் சாதிக் என்பவரை பார்க்க தொழிற்சாலைக்கு வந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு கிடந்த தீப்பெட்டி கழிவு பொருட்களில் விளையாடி கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக தீப்பெட்டி கழிவு பொருட்களில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்ததாக தெரிகிறது.

இதனால் அருகிலிருந்த அறையிலும் தீ பரவியதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்தால் சிறுவன் சைதூர் அலி படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த மல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்