கிரிக்கெட் வீரர்கள், எம்.எல்.ஏக்களை தோளில் சுமக்கிறீர்கள்... அது மட்டும் நியாயமா? - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது. இதுபோல் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடக்க முடியாது என்று மன்னார்குடி இராமனுஜ ஜீயர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மன்னார்குடி ஜீயருக்கு எதிராக அவரின் சொந்த ஊரான மன்னார்குடியிலே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சாலையில் நடமாட முடியாது என்று அமைச்சர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்து பேசிய மன்னார்குடி ஜீயரை கைது செய்ய வேண்டும் என்று திமுகவினர் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரில், அவரை உடனடியாக கைது செய்து , சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, சட்ட ஒழுங்கை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜீயரை கைது செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் பேசியதாவது - தமிழ்நாடு அரசு பட்டினப்பிரவேசத்துக்கு தடை விதித்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. ஆதீனங்கள், மடாதிபதிகள், கோயில்கள் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது.
இது குறித்து நான் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தமிழ்நாடு அரசு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், ஆன்மீகத்தில் தலையிடுவதால் மிகுந்த கெட்டப்பெயர் ஏற்படுகிறது.
வெற்றிபெற்றவுடன் கிரிக்கெட் வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை தோளில் தூக்கி சுமந்து செல்கிறார்கள். அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், மத விஷயத்தில் மட்டும் இதை ஏன் செய்ய வேண்டும். இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. திமுகவில் இருக்கும் சில கருப்பு புள்ளிகளால் கெட்டப்பெயர் ஏற்படுகின்றது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.