கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி ஸ்ரீமதி என்ற மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.
ஜாமீன் வழங்கிய நீதி மன்றம்
அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையீடு செய்ய போவதாகவும் கூறப்படுகிறது