‘உங்களுக்கு விரைவில் விடிவுகாலம்’ - இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையளித்த மு.க.ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தித் தரும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி கூடிய தமிழக சட்டசபையின் அன்றைய தினம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கலானது. இதனைத் தொடர்ந்து மறுநாள் வேளாண் துறைக்கான தனிபட்ஜெட்டும் தாக்கலானது. இதன்பின் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
கடைசி நாளான இன்று நடந்த விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பல கி.மீ. நீள வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் ஈழத் தமிழர்கள் உணவு உண்ண முடியாமல் அதிக விலை கொடுத்தும் பிரட்டை மட்டுமே சாப்பிடும் நிலை உள்ளது.
இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வரத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தி தரும் என தெரிவித்தார்.
மேலும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர், ஈழத்தமிழர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் நிலையில் அவர்கள் மீது வழக்குப் பதியாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.