அமைச்சர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே விலகல் - இலங்கையில் பரபரப்பு
இலங்கை அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நமல் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார்கள்.
இதனிடையே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், இதற்கான கடிதத்தை அதிபர் கோத்பய ராஜபக்சேவிடம் வழங்கியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் விளக்கமளித்து்ள்ளது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே மகனும், இலங்கையின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நமல் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்த முடிவு மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பிரதமரின் முடிவுகளுக்கு இது உதவக்கூடும் என்று நம்புகிறேன் என்றும், எனது கட்சி மற்றும் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.