இலங்கை தமிழருக்கான முகாம்களின் பெயர் மாற்றம்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக ரூ.317 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக நேற்று சட்டப் பேரவையில்,முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றைய தினம் இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இலங்கை தமிழர்களது முகாமில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் ரூபாய் 231 கோடி செலவில் புதிதாக கட்டித்தரப்படும். 3,510 வீடுகள் புதிதாக கட்ட நடப்பு நிதி ஆண்டில் ரூபாய் 108 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்
மேலும் இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் இலங்கை தமிழர்களின் பிள்ளைகளின் கல்விக்காக வழங்கப ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயன்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.

குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பணக்கொடை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இலங்கை தமிழர்களுக்கான இந்த அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றது.
அவர்கள் அகதிகள் கிடையாது
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் இலங்கை தமிழர் அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்த முதல்வர் , இலங்கை தமிழர்களை அகதிகள் என அழைக்க வேண்டாம். இலங்கை தமிழர்களுக்கான முகாம்களை மறுவாழ்வு முகாம்கள் என அழைப்போம். அவர்கள் அகதிகள் இல்லை. அவர்களுக்கு நாம் இருக்கிறோம். எப்போதும் நாம் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.