இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு : விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்
விமான எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் என அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கடும் நெருக்கடியில் இலங்கை:
எரிபொருள் பற்றாக் குறையால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் விநியோகிக்கப்படுகிறது. தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் டீசல் கிடைக்காததால் பயணிகளின் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
90 சதவீத தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் ரெயில்கள் மற்றும் உள்ளூர் பஸ்களை பயன் படுத்துகிறார்கள். ஆனாலும் வாகன போக்குவரத்து முடக்கத்தால் மக்கள் அவதி அடந்துள்ளனர். இந்த நிலையில் விமான எரி பொருள் தட்டுப்பாடு நிலவுவதால் விமான சேவையும் பாதிக்கும் சூழல் உள்ளது.

இதுகுறித்து விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி கூறியதாவது:
டீசல் கிடைக்காததால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத தனியார் பஸ்கள் இயங்கவில்லை. விமான நிலையத்தை நடத்துவதற்கு அத்தியாவசியமான ஊழியர்களே தற்போது பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

அபாயத்தில் விமான நிலையங்கள்
நாட்டின் விமான எரி பொருள் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் சிறிய அளவிலான எரி பொருள் மாத்திரமே கிடைக்கிறது.
சிவில் விமான சேவை அதிகார சபையுடன் இணைந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எரி பொருள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார். விமான எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது