விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு முதலுதவி.., மருத்துவருக்கு ஏர்லைன்ஸ் பாராட்டு
உடல்நலம் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெரியகுளம் மருத்துவர் மூர்த்திக்கு, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
மருத்துவருக்கு பாராட்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மூர்த்தி (78).
இவர் தனது மகனை சந்திப்பதற்காக கடந்த 19ஆம் தேதி ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு பயணம் செய்தார்.
கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சிட்னி நோக்கி சென்ற விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த 74 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மருத்துவர் மூர்த்தி அந்தப் பெண்ணை பரிசோதித்ததில், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது தெரியவந்தது.
உடனே முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரையை வழங்கி, அந்தப் பெண்ணை கண்காணித்த நிலையில், அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
மருத்துவர் மூர்த்தியின் உடனடி உதவியால் பெண் காப்பாற்றப்பட்டார். இதற்காக விமானத்தில் இருந்த பயணிகள் அவரைப் பாராட்டினர்.
மேலும், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் மருத்துவர் மூர்த்திக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.