‘இலங்கை நிலை; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி’ - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது.
அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது.
மக்கள் போராட்டம் ஓயாமல் தொடர்ந்துக்கொண்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழலே நீடித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் இந்த நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி, இந்தியாவுக்கு இது எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் இப்போது நடப்பவற்றை பார்த்து எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். 2014 முதல் இந்தியாவில் வகுப்புவாத வெறி அதிகரித்துள்ளது. இலங்கையைப் போன்று தீவிர தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாத பாதையில் செல்கிறது.
இவை அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்” என மெகபூபா முஃப்தி எச்சரித்துள்ளார்.