‘இலங்கை மறுவாழ்வு முகாம்’ - பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு
இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ.317.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பில், முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் கட்டித்தரப்படும், குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ஒதுக்கீடு, வாழ்க்கை தரம் மேம்பாடு நிதி ஆண்டுதோறும் 5 கோடி, 300 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக 6.16 கோடி ஒதுக்கீடு, விலையில் எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு உருளை மானியத்திற்கு 10.50 கோடி ஒதுக்கீடு என பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம், ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றம் செய்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சட்டமன்றத்தில் நேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கை தமிழருக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும், இனி இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் என்று அழைக்காமல், மறுவாழ்வு முகாம்கள் என அழைப்போம், அவர்கள் அகதிகள் இல்லை; நாம் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.