நாளை ராஜினாமா செய்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்சே - இலங்கையில் அதிகரிக்கும் பதற்றம்..!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக உறுதியான எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.இதனையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும்,அவர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் கோத்தபய வீட்டில் நடந்த சிறப்பு கேபினட் கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பேசும்போது தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் பதவியை ஏற்க பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலலேகயா தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இருவரும் தொலைபேசியில் பேசிய போது சஜித் பிரேமதாசா சில நிபந்தனைகளை விடுத்ததாகவும், அதை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்று கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் அமைச்சரவை கலைக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.