"இலங்கை, நேபாளத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க திட்டம்" - திரிபுரா முதல்வர் பேச்சால் பரபரப்பு

amit shah Biplab Kumar Deb tripura
By Jon Feb 15, 2021 09:28 PM GMT
Report

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதலமைச்சரும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் தேப் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜ.க விரும்புவதாக கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்' என்று கூறினார்.

திரிபுரா முதலமைச்சரின் இந்த பேச்சு மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசியிருக்கும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இது அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனவும், இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாதிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முதலமைச்சர் ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது துரதிரஷ்டவசமானது என கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.