இந்தியாவுக்கு எதிராக எந்த செயல்களிலும் இலங்கை ஒருபோதும் ஈடுபடாது - கோத்தபய ராஜபட்ச உறுதி

srilanka-india-politics-meeting
By Nandhini Oct 06, 2021 10:12 AM GMT
Report

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும், இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு ஒருபோதும அனுமதி அளிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சவை அவர் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பல்வேறு விவகாரங்கள் பற்றி இருவரும் விவாதித்தார்கள்.

இச்சந்திப்புக்குப் பிறகு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது -

சுற்றுலா, மின்னுற்பத்தி, கொரோனா பொருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

விரிவான புரிதலின் அடிப்படையில் சீனாவுடன் இலங்கை நட்புறவைத் தொடர்கிறது. எனவே, அந்த நட்புறவு குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று ஷ்ரிங்லாவிடம் கோத்தபய ராஜபட்ச கூறினார்.

இலங்கையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். திருகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை இந்திய நிறுவனம் குத்தகைக்கு நடத்தி வருகிறது. இதற்கு இலங்கை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதில், இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும் வகையில் சுமுகத் தீர்வு எட்டப்படும். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 13ஏ பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக பிரச்சினை நீடிக்கிறது.

தற்போதைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதன் மூலம் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கண்டடைந்துவிடலாம் என்று ஷ்ரிங்லாவிடம் கோத்தபய ராஜபட்ச கூறினார். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இலங்கையில் துறைமுகங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சீனா பல கோடி டாலர் கடனுதவி அளித்திருக்கிறது. 

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு சீனா உதவி செய்திருக்கிறது. இதனால், இலங்கையைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் சீனா ஈடுபடக்கூடும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதை தெளிவுப்படுத்தும் விதமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே உறுதியளித்திருக்கிறார். 

முன்னதாக, இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபட்சவையும், அந்நாட்டிலுள்ள தமிழர் கட்சிகளின் தலைவர்களையும் ஹர்ஷ்வர்தன் ஷ்ரில்லா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுக்கு எதிராக எந்த செயல்களிலும் இலங்கை ஒருபோதும் ஈடுபடாது - கோத்தபய ராஜபட்ச உறுதி | Srilanka India Politics Meeting