பிரித்தானியாவின் உருமாறிய வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு

corona patient dead
By Jon Feb 14, 2021 04:19 AM GMT
Report

பிரித்தானியாவில் பரவி வந்த உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹானில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை எடுத்து வருகிறது. இதைத் தவிர உருமாறிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

குறிப்பாக பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இறுதியில் புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது சீனாவில் பரவிய கொரோனா வைரஸை விட 70 சதவீதம் தீவிரமாக பரவும் திறன் கொண்டதால், இந்த நோய் தங்கள் நாட்டிற்குள் பரவிவிடக் கூடாது என்பதற்காக பல நாடுகள் பிரித்தானியாவுடன் ஆன, விமானசேவைக்கு தடை விதித்தது. இதையடுத்து தற்போது இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை கொழும்பு ஜெயவர்தனேபுரா பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் மருத்துவர் சண்டிமா ஜீவந்திரா தெரிவித்துள்ளார். இந்த தொற்று வீரியமாக பரவக்கூடியது எனவும் கூறியுள்ளார். இலங்கையில் 73 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 379 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், தற்போதும் நாள்தோறும் 800-க்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தற்போது அங்கு புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா அளித்த தடுப்பூசிகள் மூலம் இலங்கையில் கடந்த மாத இறுதியில் இருந்தே தடுப்பூசி திட்டம் தொடங்கியிருப்பது நினைவுகூரத்தக்கது.