“பொருளாதார நெருக்கடியை சமாளித்து இலங்கையை மீட்டு கொண்டுவர முடியும்” - மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை
பொருளாதார நெருக்கடியை சமாளித்து இலங்கையை மீட்டு கொண்டுவர முடியும் என்று அந்நாட்டு மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர்.
இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்கே, மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றப் பின், முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த நந்தலால்,
“தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான வழிகளில் ஒன்று, மத்திய வங்கியை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது தான். நாட்டின் பொருளாதார நெருக்கடியை என்னால் தீர்க்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மத்திய வங்கியை சுயாதீனமாக நடத்தும் அதிகாரத்தை அதிபர் எனக்கு அளித்துள்ளார்.
இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு என்னிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே கேட்டுக் கொண்டார். எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடிய ஒரு சுயாதீன நிறுவனமாக மத்திய வங்கியை பேணுவதே எனது நோக்கமாகும்.
கொள்கை வட்டி விகிதத்தை 7 சதவீதம் மேலும் அதிகரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கையில் இவ்வளவு அதிக விகிதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். நெருக்கடி நிலைமையை நிவர்த்தி செய்ய தேவையான மற்றும் போதுமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளோம்.
சந்தை நம்பிக்கையில் சில ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கிறேன். திங்கட்கிழமை சந்தை திறந்தவுடன் சந்தைகளில் இருந்து நேர்மறையான எதிர்வினையை எதிர்நோக்கி உள்ளோம். நாங்கள் வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருப்போம்.
மேலும் வங்கிகளின் முழு ஆதரவும் எங்களுக்குத் தேவை.
இந்த வாகனம் விபத்துக்குள்ளாகும் முன் அதற்கு பிரேக் போட வேண்டும். இலங்கையில் தற்போது நிலவிவரும் விஷயங்கள் பெரும் சவாலாக உள்ளன. நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.