இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத குடியேறிகளா? கொந்தளித்த ராமதாஸ் !

refugees srilankan tamilnadu Ramadoss
By Irumporai Jul 31, 2021 10:51 AM GMT
Report

இலங்கைத் தமிழ் அகதிகள் யாரும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை. அவர்கள் தஞ்சம் புகுந்தவர்கள் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவர்கள் அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆணையிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், ஆகவே அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மத்திய வழக்கறிஞரின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ். இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை.

அவர்கள் தஞ்சம் புகுந்தவர்கள். கடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர்.

அவர்கள் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது தவறாகும் என கூறினார்.

மேலும் மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல. இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும் எனகூறினார்.

மேலும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் திமுகவின் சட்டசபை தேர்தல் அறிக்கையிலும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது