இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய பயணம் - கடன் வாங்கவா?

India Sri Lanka
By Fathima Dec 03, 2021 09:18 AM GMT
Report
Courtesy: BBC Tamil

பஷில் ராஜபக்ஷ இலங்கை நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் முதலாவது விஜயமாக இந்தியா சென்றமை அனைவராலும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.

செயற்கை உரம் தொடர்பிலான சர்ச்சையில், இலங்கையுடன் நெருங்கிய உறவுகளை பேணி வந்த சீனா, தற்போது சில எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இந்த விஜயம் அமைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவர் இந்தியா சென்றுள்ளார்.

இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள பஷில் ராஜபக்ஷ, இந்தியாவின் முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிசம்பர் 1ஆம் தேதி, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது, பஷில் ராஜபக்ஷ ஆராய்ந்திருந்தார்.

பொருளாதார ரீதியில் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள ஒத்துழைப்புகளையும், பஷில் ராஜபக்ஷ நினைவூட்டியதுடன், அதற்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இரு தரப்பிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை எதிர்காலத்தில் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்து, இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த பஷில் ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.

பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் உறுப்பினருமான எம்.திலகராஜ், பிபிசி தமிழுக்கு கருத்துரைத்தார்.

பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயமானது, பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிக முக்கியமானது என எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான முக்கோண ரீதியில் இந்த விடயத்தை அவதானிக்க வேண்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய தொடர்புடைய பேணி வந்த நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதற்கு எதிராக இருந்துள்ளதை அவர் இதன்போது நினைவூட்டினார்.

பொருளாதார ரீதியில் புள்ளி விவரங்களுடன், இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை அவர் விளக்கி கூறினார்.

2014ம் ஆண்டு இலங்கையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தியாவிடமிருந்து 21 சதவீத மொத்த இறக்குமதியும், சீனாவிடமிருந்து 12 சதவீத மொத்த இறக்குமதியும் பதிவாகியுள்ளது.

ஏனைய ஆசிய நாடுகளிடமிருந்து 18 சதவீதமும், மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து 9 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளிடமிருந்து 8 சதவீதமாகவும் 2014ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் காணப்படுகின்றன.

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2014ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிடமிருந்தே அதிகளவிலான பொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.

எனினும், இது சமீபத்திய ஆண்டுகளில் மாறியுள்ளது. 2020ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சீனாவிடமிருந்தே அதிகளவிலான இறக்குமதிகள் இடம்பெற்றுள்ளன.

சீனாவிடமிருந்து 22 சதவீத இறக்குமதியும், இந்தியாவிடமிருந்து 19 சதவீத இறக்குமதியும் இறக்குமதியை இலங்கை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார். இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தியாவை இலங்கை பின்தள்ளி, சீனாவை முன்னிலைப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நிதி அமைச்சரின் இந்திய விஜயத்தை தொடர்புபடுத்தி பார்க்க முடியும் என அவர் கூறுகின்றார்.

இலங்கையின் ஏற்றுமதி சந்தையை இந்தியா இழக்க தயாராக இல்லை. பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலான செல்வாக்கும் இதில் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கலாசார ரீதியில், சீனா இலங்கை ஆகிய நாடுகளை விடவும், இந்தியா இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பு நெருங்கியதாக காணப்படுகின்றது.

ஏற்றுமதி, இறக்குமதி விடயத்தில் கூட, கலாசார விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவை சரி செய்துகொள்வதற்கான ராஜதந்திர நகர்வுகளை இந்தியா முன்னெடுத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இந்த ராஜதந்திர நகர்வின் ஓர் அங்கமாகவே, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் இந்தியா விஜயம் அமைந்திருக்கலாம் என தான் நம்புவதாக அரசியல் ஆய்வாளர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.

எரிவாயு வெடிப்பு

இலங்கையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எரிவாயு வெடிப்பு சம்பவங்களையும், பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தையும் தொடர்புப்படுத்தி, எம்.திலகராஜ் கருத்து வெளியிட்டார்.

உயிர்வாயு என கூறப்படும் பயோ கேஸ் திட்டத்தை பஷில் ராஜபக்ஷ ஆராய்ந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையில் தற்போதுள்ள இந்த நிலைமைக்கும், பயோ கேஸ் விடயத்திற்கும் இடையில் தொடர்புள்ளதாக என கேள்வி எழுப்பப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

முதலீட்டு ரீதியில் இந்த திட்டத்தை இலங்கையில் அமல்படுத்த முயற்சிக்கின்றார்களா எனவும் கேள்வி எழுவதாக அவர் கூறுகின்றார்.

கடன் வாங்குவதற்காகவா, பஷில் இந்தியா சென்றார்?

இந்தியாவிலிருந்து முதலீட்டு திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காகவே தான் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதாகவும், கடனை பெற்றுக்கொள்வதற்காக இந்தியா செல்லவில்லை எனவும் பஷில் ராஜபக்ஷ, இந்திய விஜயத்திற்கு முன்னதாகவே கூறியிருந்ததாக எம். திலகராஜ் நினைவுப்படுத்தினார்.

இந்தியாவிலிருந்து முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, பஷில் ராஜபக்ஷ இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார் என அறிய முடிகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவின் பயோ கேஸ் நிறுவனத்தை இலங்கையில் முதலீடு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்படக்கூடும் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த திட்டமானது, கடன் உதவித் திட்டமாக நாட்டிற்குள் கொண்டு வராது, முதலீட்டு திட்டமாக கொண்டு வரப்படும் பட்சத்தில், நாட்டிற்குள் பணம் வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் திலகராஜ் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு நாட்டிற்குள் கொண்டு வரப்படும் பணத்தின் ஊடாக, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்த்தே, பஷில் ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கக்கூடும் என எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.