வெளிநாட்டு வேலை: பெண்களை பாலியல் தொழிலுக்கு ஏலம் விடும் கொடூரம்!
பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி இலங்கை பெண்களை ஈடுபடுத்துவதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இலங்கை பெண்கள்
இலங்கையில் பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பெண்களை ஓமன் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்ய, விசாரணைக்கு உத்தரவிட்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,
பாலியல் தொழில்
"வேலை வாங்கித் தருவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பலரையும் சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துசென்றுள்ளனர். இந்த சம்பவத்தை முற்றிலும் ஒழிப்பதற்கும், இதன்பின்னால் இருக்கும் போலி முகவர்கள், குடிவரவு துறையில் இருக்கும் அரசு அதிகாரிகள், விமான நிலையத்தில் பணிப்புரியும் அதிகாரிகள் என பலரும் கைதுசெய்யப்படுவார்கள்.
இலங்கையை சேர்ந்த பெண்களை, துபாய் வழியாக ஓமன் அழைத்துச்சென்று, சிலர் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என்றார். தற்போது இது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில்,
சுற்றுலா விசா மூலம் ஓமனுக்கு வேலைக்கு செல்வதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.