கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை - நிதியமைச்சர் எடுத்த அதிரடி முடிவு
இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நிலை மோசமடைந்து வரும் நிலையில் அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
லங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. கடந்த சில 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இலங்கையில் நிலைமையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. அதன்படி 1 பில்லியன் டாலர் கடனுதவியை அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளதோடு டீசல் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா அனுப்பியது.
ஆனாலும் நிலைமை சிறிதளவு கூட சீராகாததால் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர எங்களுக்கு உடனடியாக அவசர நிதி தேவை. இந்த நிதியை அமெரிக்கா விரைவில் எங்களுக்கு அளிக்க வேண்டும் என அலி சப்ரி கூறியுள்ளார்.
நிதியமைச்சருடன் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர். மேலும் இலங்கை பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 81 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட இலங்கை இப்போது $8.6 பில்லியன் மதிப்புள்ள கடனை எதிர்கொண்டுள்ளது. அங்கு மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ராஜபக்ச அரசுக்கு எதிரான அரசியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசை உருவாக்க அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுத்தார். இருப்பினும், இதற்கு எந்த அரசியல் கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan