கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை
கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இலங்கை அரசு இந்தியாவிடம் கடன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது போன்ற காரணங்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை.
அதேசமயம் சூறாவளி தாக்கியதால் அமெரிக்க வளைகுடா மெக்ஸிகோ பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 84 டாலர்களாக உயர்ந்தது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். கொரோனா பாதிப்பால் இலங்கையின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் அந்நாடு நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. மேலும் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியிலும் அந்நாடு சிக்கியுள்ளதால் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியாமல் தவிக்கிறது.
அதேபோல் இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம், அந்நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளான பாங்க் ஆப் சிலோன் மற்றும் பியூப்பிள்ஸ் வங்கி ஆகிய இரண்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.
இதனிடையே கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு இந்திய -இலங்கை பொருளாதார கூட்டாண்மை ஏற்பாட்டின் 500 மில்லியன் கீழ் அமெரிக்க டாலர் நிதியை பெறுவதற்காக இந்தியாவிடம் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.