13-ஆம் தேதி பதவி விலகும் அதிபர் கோட்டபய ராஜபக்ச..!
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச 13-ஆம் தேதி பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் வெடித்த போராட்டம்
இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
பிரதமர் ராஜினாமா
அதற்கு முன்னதாக ரணில் அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோட்டபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார்.
பதவி விலகும் அதிபர்
அதற்கு பதில் அளித்துள்ள கோட்டபய ராஜபக்ச, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.