இலங்கையில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதியமைச்சர் ராஜினாமா- உச்சக்கட்ட பரபரப்பு
இலங்கையில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதியமைச்சர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து இக்கட்டான நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது.
அதன்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் புதிய நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்ற 24 மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதனால், இலங்கை அரசியலில் உச்சபட்ச குழப்பம் ஏற்பட்டுள்ளது