இலங்கை நிலச்சரிவில் சிக்கிய நண்பர்கள் - வேதனையும், மீட்பும்!
இனிமையான அனுபவங்களை எதிர்பார்த்து பயணிக்கும் போது கசப்பான அனுபவங்கள் சூழந்து கொண்டால் ஏற்படும் துயரத்தின் வலி பெரிது. சென்னை முகப்பேரைச் சேர்ந்த என்னுடைய நண்பர்கள் 29 பேர் (இவர்களில் 12 பேர் பெண்கள்) செய்த பயணத்தைப் பற்றியதுதான் இந்தப் பதிவு.
நிலச்சரிவு
நண்பர்கள் சண்முகசுந்தரம், சரவணன், சிதம்பரநாதன், ஆறுமுகம், ஸ்டான்லி, துரை, சந்திரன் ஆகியோர் அடங்கியது இந்தக குழு. இவர்கள் நவம்பர் 25- ஆம் தேதி இலங்கை பயணம் சென்ற போது நேரிட்ட இன்னல்கள் சொல்லிமாளாது.

இலங்கையில் பெய்த கன மழை, அதனால் உருவான நிலச்சரிவு இவர்களைப் பாடாய் படுத்திவிட்டது. தப்பித்ததே அரிதாகிவிட்டது. கண்டியை சுற்றிப்பார்த்து விட்டு 27- ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் புறப்பட்டு இரவு நுவரோலியாவை அடைவது என்பது இவர்களின் திட்டம்.
ஆனால் நுவரோலியாவுக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இவர்கள் செல்லவேண்டிய சாலை நிலச்சரிவால் மூடப்பட்டு விட்டது. மேற்கொண்டு செல்ல முடியவில்லை. பக்கத்தில் குடியிருப்புகள் கிடையாது. அடர்ந்த காடு. இவர்களைப் போன்று இன்னும் சிலரும் அங்கு சிக்கி நின்றனர்.
பேருந்தை திருப்பிக் கொண்டு வந்த வழியே கண்டிக்கு திரும்ப முயன்றால் அந்தப் பாதையையும் நிலச்சாிவு மூடிவிட்டது. பேருந்தை விட்டு இறங்கி நிற்கவும் முடியவில்லை. சோ என்ற இரைச்சலும் காற்றுடன் மழை. அன்று இரவு முழுவதும் பேருந்தை விட்டு வெளியில் வரமுடியவில்லை.
சென்னையில் உள்ள எங்களுக்கு தகவல் கிடைத்தாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை மறு நாள் வெள்ளிக்கிழமை காலை அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள நுன் ஓயா ரயில் நிலையத்தை அடைந்தார்கள். அந்த நிலையத்தில் இரண்டு அறைகளை கொடுத்து உள்ளனர். அதில் பெண்களை தங்கவைத்துவிட்டு ஆண்கள் அனைவரும் கால் கடுக்க காத்திருந்தார்கள்.
செல்போன் டவர்கள் செயலிழந்துவிட்டன. செல்போன்களில் சார்ஜ் இல்லை. ரயில் நிலையம் எதிரே இருந்த டீக் கடை யில் கிடைத்த வறுக்கி, ரொட்டி போன்றவைகள் இவர்களின் உணவு. அந்த இடத்தில் குடிநீர் கூட கிடைக்க வில்லை என்பதுதான் வேதனை. இலங்கை அதிகாரிகள் யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
வெள்ளிக்கிழமை பகலும் இரவும் இப்படியே கழிந்தன. இடை விடாத முயற்சியினால் சனிக்கிழமை காலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நண்பருமான செந்தில் தொண்டமான் இணைப்புக் கிடைத்தது. தகவல் தெரிவித்ததும் அவர் மின்னல் வேகத்தில் செயல்பட ஆரம்பித்தார்.
மீட்பு
அவர் சொன்னதன் பேரில் முகப்பேர் நண்பர்கள் குழு தங்களுடைய பேருந்தில் ஆபத்தான பாதையில் 40 கிலோ மீட்டர் பயணம் செய்து ஹட்டன் என்ற சிறு நகரத்தை அடைந்தார்கள். அங்கும் தங்குவதற்கு ஓட்டல் எதுவும் கிடைக்கவில்லை. உடனே தொண்டமான் உத்தரவின் பேரில் அவருடைய கட்சி சட்டமன்ற உறுபபினர், மேயர் உள்ளிட்டோர் முகப்பேர் நண்பர்களைச் சந்தித்து ஹட்டனில் ஒரு வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தங்க வைத்தார்கள்.
இதனிடையே நான் கொடுத்த தகவலின் பேரில் தமிழக அரசின் அயலக வாரியத் தலைவர் கார்த்திகேய சேனாதிபதி அவர்கள் இந்த பிரச்சினையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் , இலங்கை அரசை தொடர்புக் கொண்டு நிலமையை விவரித்து உள்ளார்கள்.
இன்னொரு புறம் இந்து நாளேட்டின் இலங்கை செய்தியாளர் மீரா சீனிவாசன் , டிவி செய்தியாளர் மயூரன் ஆகியோரும் பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்திற்கு எடுத்துசென்றதோடு தேவையான ஆலோசனைகளை வழங்கி நண்பர்களுக்கு தெம்பூட்டினார்கள். சனிக்கிழமை பகல் பொழுதை ஹட்டனில் கழித்த நண்பர்களை ஞாயிற்றுக் கிழமை மேற்கொண்டு பயணம் செய்வதற்கு இலங்கை போலீசார் அனுமதிக்கவில்லை.
சாலைகளில் நிலச்சரிவு அகற்றப்படாமல் கிடந்ததே இதற்குக் காரணம். இருப்பினும செந்தில் தொண்டைமான் ஆதரவாளர்கள் வழிகாட்டுதலில் கிராமத்துச் சாலைகளில் பயணம் செய்து ஞாயிறு நள்ளிரவு கொழும்பை அடைந்தார்கள். ஹட்டனில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் 4 மணி நேர பயணத்தில் உள்ள கொழும்பை அடைவதற்கு இவர்களுக்கு 14 மணி நேரம் ஆகிவிட்டது. அதனால் டிக்கெட் பதிவு செய்திருந்த ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை.
அடுத்த சோதனை ஆரம்பமானது. ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் அதிகாரிகள் அவர்களின் அடுத்த விமானத்தில் டிக்கெட் தருவதற்கு மறுத்துவிட்டனர். இயற்கை பேரிடர் போன்றவற்றில் சிக்கிக் கொள்கிறவர்களுக்கு அடுத்த விமானத்தில் இடம் தரவேண்டும் என்ற விதியை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. திரும்பவும் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள், செந்தில் தொண்டைமான் , கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் களத்தில் இறங்கினார்கள்.
பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டதால் திங்கள் மாலைதான் அனைவருக்கும் விமான டிக்கெட்டுகளை ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் அதிகாரிகள் கொடுத்தார்கள். அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை வந்து சேர்ந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் டிக்கெட் பதிவும் பயண ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த சென்னையில் உள்ள டிராவல் ஏஜென்ட் சிறு உதவியைக் கூட செய்து தரவில்லை.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று இதைத் தான் சொல்வார்கள் என மூத்த ஊடகவியலாளர் ராஜா வாசுதேவன் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கையில் இருந்து திரும்பிய 30 பேரும் சென்னை விமான நிலையில் பேட்டி அளித்துள்ளனர்.
அப்போது நுவெரலியாவில் நாங்கள் சிக்கியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் தொண்டைமானுக்கு தகவல் தெரிவித்தார். செந்தில் தொண்டைமான் எங்களை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தார் என தெரிவித்தனர்.